Monday, April 12, 2010

குடிச்சா என்ன?

மார்ச் 27லில் நானும், +2 முடித்த என் பையன் ரிஷியும் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு செல்ல டில்லி ரயில்வே ஸ்டெஷன் ஆறாவது ஃப்ளாட்ஃபார்மில் ஜீலம் ஜம்மு டிரையின் லேட் என்பதால் இரவு 8 மணியளவில் 3 மணிநேரமாக காத்து இருக்கும் போது, அந்த ட்ரைனில் செல்வதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் கூட்டம் கூட்டமாய் காத்து இருந்தனர். ஜம்மு செல்வதற்கு காத்து இருந்தவர்களில் நிறைய தமிழ் சகோதரர்களும் இருந்தனர்.

அதில் இரண்டு பேரிடம் பேசும் போது தன் வாழ்க்கையில் தான் செய்த பெரும் தவறு யூனிஃபார்ம் போட்டது தான் என்றார்.மற்றொருவர் பேசுகையில் ஒரு 7 ஆயிரம் ரூபாய் மாதம் வருமானம் இருந்தால் என் சொந்த ஊரில் இருக்கும் சொந்த வீட்டில் மிக சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவேன் என்னம்மா வாழ்க்கை இது என்று மிக சலித்துக் கொண்டார். இன்னொருவர் என் பையனிடம் ஆர்மி அது இது என்று சேர்ந்து விடாதே. உள்ளூரிலேயே ஏதோ ஒரு வேலைக்கு சென்றுவிடு என்றும் கூறினார். அனைவரும் மிக சோர்வாக இருந்தனர்.

அனைவரும் திடீரென்று அழைப்பு வந்ததால் உடனே ஜம்மு சென்று அங்கிருந்து பாகிஸ்தான் பார்டருக்கு செல்லவேண்டும் ட்ரையின் ரிசர்வ் செய்யாமல் வந்து இருந்தனர். சட்டீஸ்கரிலிருந்து வந்து இருந்தனர். ஒரு பெட்டி+ஒரு படுக்கை மடிப்பு. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் வாளியில் நிறைய தண்ணீர் பாட்டில்கள் வைத்து இருந்தனர். 11 மணியாகும் நாங்கள் செல்லும் ட்ரையின் டில்லி வர என்று அறிந்தோம். சில பேர் சாப்பாடு வாங்கி வர நாங்கள் அமர்ந்து இருந்த சீட்டிற்கு பக்கத்திலேயே வட்டமாக அவர்கள் லக்கேஜின் மீது அமர்ந்து சாப்பாட்டினை திறந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

மேலும் அவர்களின் நண்பர்கள் சிலரும் கூட்டமாக வர ஒரு தெலுங்கு நண்பர் என்னிடம் வந்து நீங்கள் உங்கள் பையனுடன் அடுத்து இருக்கும் சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள் அவர்கள் எல்லோரும் மருந்து சாப்பிட போகிறார்கள் என்று சிரித்துக் கொண்டே கூறவும நானும் அடுத்த சீட்டில் இடம் இருக்கவே கொஞ்ச தூரத்தில் இருக்கும் சீட்டில் என் பையனுடன் சென்று அமர்ந்தேன். வாளியில் இருந்து ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை எடுத்து வெளியில் வைத்து அடியில் இருந்து மருந்து பாட்டில்களை எடுத்து மிக்ஸ் செய்து ப்ளாஸ்டிக் டம்ளர்களில் குடிக்க தொடங்கினர். என்ன ப்ளாட்ஃபார்ம்லியே குடியா என்று நான் எரிச்சல் பட்டேன் என் மகனிடம். கொஞ்சமாய் குடித்து விட்டு சாப்பிட்டனர். அந்த தமிழ் நண்பர் என்னம்மா தப்பா நினைக்காதீங்க எங்க பிழைப்பே இப்படி தான் என்று சமாதானம் வேறு சொல்லிவிட்டு சென்றார். நான் எதுவும் சொல்லாமல் அசடாய் சிரித்துக் கொண்டு இருந்து விட்டேன்.

போன வாரம் 76 ஜவான்கள் மாவோயிஸ்டுகளால் சட்டீஸ்கரில் கொல்லப் பட்ட நியூசை டி.வியில் பார்த்த போது அன்று டில்லியில் நான் பார்த்த அத்தனை வீரர்களையும் நினைத்துக் கொண்டேன். அனைவரும் 40 வயதிற்குள் உள்ளவர்கள். அவர்கள் வாழ்க்கையில் அவ்வப்போது இப்படி குடிப்பது மட்டுமே அவர்கள் அனுபவிக்கும் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு என்று எனக்கு புரிந்தது.
திடீரென்று அழைப்பு வரவே ஜம்மு சென்றதால் அந்த நண்பர்கள் உயிர் பிழைத்தார்களோ என்று நினைத்துக் கொண்டேன்.

எவ்வளவு சுகமாக நாம் தமிழ்நாட்டில் வசிக்கிறோம் என்று ஜம்மு போய் வந்ததில் இருந்து புரிகிறது.


2 comments:

சுசி said...

குடிமக்கள காக்குறத்துக்காக அவங்க கொஞ்சமா குடிச்சா தப்பு இல்லைனு எனக்கு தோணுதுங்க.

நல்லா எழுதி இருக்கீங்க.

CS. Mohan Kumar said...

வருத்தபடுவதா கோபபடுவதா என தெரியலை; பாவம் தான் ஜவான்கள்